காங்கிரஸ் அமைப்பு தேர்தலையொட்டி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்
காங்கிரஸ் அமைப்பு தேர்தலையொட்டி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தேர்தல் அதிகாரி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தலையொட்டி விழுப்புரம், கடலூர், சேலம், நாகை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி பாபிராஜூ தலைமை தாங்கினார். தேர்தல் துணை அதிகாரி சத்யன்புத்தூர், தேர்தல் பொருப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனுவாசக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில தேர்தல் அதிகாரி பாபிராஜூ, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி பேசுகையில், கட்சியின் அமைப்பு தேர்தலையொட்டி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இம்மாத இறுதிக்குள் இப்பணியை நிர்வாகிகள் முடிக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடி அளவில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் ஒன்றிய அளவிலும், நகர அளவிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை முடிந்து மாவட்ட தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்காக அனைவரும் கருத்து, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் அயராது பாடுபட்டு உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்த வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஆர்.பி.ரமேஷ், ஜெய்கணேஷ், அர்த்தநாரி, விஜயசுந்தரம், விழுப்புரம் மாவட்ட பொதுச்செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், முன்னாள் தலைவர் சிவா, ஆரணி தலைவர் தினகரன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நாராயணசாமி, துணைத்தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், சண்முகம் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.