பட்டாசு–தீப்பெட்டிஆலை உற்பத்தியாளர் வேலைநிறுத்தம் நீடிப்பு
பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நீடிப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளிலும், தீப்பெட்டி ஆலைகளிலும் வேலை செய்கின்றனர். இதில் பட்டாசுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்பட்டு இருப்பதால் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 30–ந் தேதி முதல் ஆலைகளை மூடிவிட்டனர். பட்டாசு ஆலை அதிபர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று 3–வது நாளாக 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடிக்கிடந்தன. மேலும் பட்டாசு மொத்த விற்பனைக்கடைகளும் மூடிக்கிடக்கின்றன.
இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்களும் குவியும். தற்போதைய சூழலில் பட்டாசு தொழில் மொத்தமாக முடங்கிக்கிடக்கிறது. இதனால் சிவகாசி பகுதி முழுவதும் களை இழந்து காணப்படுகிறது.
இதே போன்று சாத்தூர், ஏழாயிரம்பண்ணை பகுதியில் சுமார் 250 தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதன் உப தொழிற்கூடங்கள் 200–க்கும் மேற்பட்டவை உள்ளன. பகுதி எந்திரத்தில் தீப்பெட்டி தயாரிக்க முன்பு 6 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஜி.எஸ்.டி.யில் இதனை முழுவதும் எந்திரவகை தயாரிப்பில் சேர்த்து 18 சதவீத வரி அமல்படுத்தியுள்ளனர். சாத்தூர் பகுதியை பொறுத்தவரை பகுதி எந்திர தீப்பெட்டி ஆலைகள்தான் அதிக அளவில் உள்ளன. இதனால் வரியை குறைக்க கோரி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களது வேலை நிறுத்தம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.
இந்த தொழிலில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களது வாழ்வாதாரம் இப்போது கேள்விக்குறியாகி விட்டது. சாத்தூர் பகுதியில் இருந்து தினமும் சுமார் 300 லாரிகளில் பல்வேறு மாநிலங்களுக்கு தீப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும். இவை அனைத்தும் முடங்கிக்கிடக்கின்றன.