தண்ணீரில் மிதக்கும் என்று நினைத்து தனுஷ்கோடியில் கட்டிட கற்களை பெயர்த்து எடுக்கும் சுற்றுலா பயணிகள்

தண்ணீரில் மிதக்கும் என்று நினைத்து தனுஷ்கோடியில் உள்ள கட்டிடங்களில் கற்களை சுற்றுலா பயணிகள் பெயர்த்து எடுத்துச் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-07-02 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரை. கடந்த 1964–ம் ஆண்டு புயலால் தனுஷ்கோடி பகுதியில் இருந்த கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. புயலில் தப்பிய ஒரு சில கட்டிடங்கள் மட்டும் சேதமடைந்த நிலையில் தற்போது அங்கு உள்ளன. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் முரக்கல், பவளப் பாறை கற்கள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டிடத்தில் உள்ள கற்கள் தண்ணீரில் மிதக்கும் என்று நினைத்து அவற்றை பெயர்த்து எடுத்து வீடுகளுக்கு கொண்டு சென்று வருகின்றனர். இதனால் கட்டிடங்கள் மேலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

எனவே கட்டிடங்களை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யும் வகையிலும் தனுஷ்கோடி பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையில் உள்ள கட்டிடங்களை புனரமைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கும் வகையில் பூங்கா அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்