போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அதிகரிப்பு

காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருவதன் எதிரொலியாக மாணவ–மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தாராபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2017-07-02 22:00 GMT

தாராபுரம்,

விழியில் விழுந்து..! இதயம் நுழைந்து..!! உயிரில் கலந்த உறவுவைத்தான் ‘காதல்’ என்கிறார்கள் கவிஞர்கள். காதல்.., மறைவதும் இல்லை.., அழிவதும் இல்லை. சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை, உன்னதமான உறவுகளைக் கொண்டு சீர்செய்வது காதல் மட்டுமே. அதனால்தான் என்னவோ, காதல் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அதற்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. சமூகத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டபோதும், காதல் மட்டும் சாதி, மதம், இனம், பணம், படிப்பு, பட்டம், பதவி என்கிற மையப்புள்ளியிலிருந்து விலகாமல், அப்படியே நிலை கொண்டிருக்கிறது. இதில் எதையாவது ஒன்றை முன்னிறுத்தி காதலை ஏற்க மறுக்கிறவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காதலிப்பது தவறில்லை. அது மனித உரிமை என்கிறது வாழ்வுரிமை சட்டம். உண்மையான, உன்னதமான காதலுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறபோது, காதலர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. அப்போது காதலர்கள் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் விளைவு சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக சில சட்டரீதியான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வயது நிரம்பிய காதலர்கள் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத நிலையில், காதல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடைவது வழக்கம். தற்போது போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடையும் காதலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இளைய சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கான காரணத்தை உற்றுநோக்கினால் சில உண்மைகள் தெரியவருகிறது.

பெரும்பாலான காதல் சிறு வயதில் ஏற்பட்ட காதலாக இருப்பது வேதனை அளிக்கிறது. அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 22 வயதுக்கு முன்பும் ஏற்படுகிற காதலைத்தான் சிறுவயது காதல் என்கிறோம். போலீஸ் நிலையங்களுக்கு தஞ்சம் தேடி வரும் காதலர்களில் பெரும்பாலான பெண்களுக்கு 19 வயது தொடங்கி ஓரிரு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதை ஆதாரங்கள் மூலம் தெரியமுடிகிறது. அதுபோல் ஆண்களும் திருமண வயது நிரம்பி ஓரிரு நாட்கள் ஆனவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த காதலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமண வயதுக்கு முன்பு சுமார் 3 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், தற்போது பெற்றோர்களுக்கு தெரிந்து விட்டதால், அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறுகிறார்கள். இது எப்படி உண்மையானதாகவும், உன்னதமானதாகவும் இருக்க முடியும். போலீஸ் நிலையத்தில் தஞ்சம் தேடி வந்த காதலர்களுக்கு திருமண வயது நிரம்பி இருந்தால், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் திருமண வயது நிரம்பாத காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடையும் போது, அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி, அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்த்து வைப்பதும் போலீசாரின் கடமையாக இருக்கிறது.

பள்ளி பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சிதான். இது காதல் அல்ல, பல ஆண்டுகளாக பாசத்தை கொட்டி வளர்த்த தங்கள் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்வது என்பது ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதை காதலர்கள் உணரவேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாராபுரத்தில்தான் அதிக அளவில் காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைகிறார்கள். கடந்த 6 மாதத்தில் மட்டும் 50–க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இங்கு வரும் காதலர்களை விசாரித்தபோது காதல் ஜோடிகளுக்கு மிகவும் ராசியான போலீஸ் நிலையமாக இது இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

காதல் ஜோடிகள் அதிக அளவில் தஞ்சம் அடைவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தாராபுரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து வரும் காதல் ஜோடிகளுக்கு மட்டுமே இனி பாதுகாப்பு அளிப்பது, மேலும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சரகத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள, மாணவ–மாணவிகளுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்குவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்