அமராவதி சர்க்கரை ஆலைக்கு ரூ.25 கோடி வழங்க வேண்டும்
அமராவதி சர்க்கரை ஆலைக்கு ரூ.25 கோடி வழங்க வேண்டும் என்று மடத்துக்குளத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மடத்துக்குளம்,
மடத்துக்குளத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கடன் விடுதலை மாநாடு மற்றும் உழவர் தின ஊர்வலத்தில் 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கேடிஎல் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் தனியார் திருமண மண்டபம் வரை ஊர்வலமாக சென்ற விவசாயிகள் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் கதிர்வேல் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார்.
மாநாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் தெய்வசிகாமணி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக விவசாயிகளுக்கான போராட்டங்களின் போது உயிர் நீத்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாநாட்டில் தமிழக விவசாயிகளுக்காக 41 நாட்கள் டெல்லியில் போராடிய விவசாயிகளை பாராட்டி கவுரவித்தனர். மேலும் தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் சிறு, குறு விவசாயிகள் என்று இனம் பிரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வறட்சி மற்றும் கடன்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்திய–மாநில அரசுகள் ஆண்டுதோறும் விவசாயத்துக்கென தனிநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், மூலனூரில் முருங்கை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், அமராவதி சர்க்கரை ஆலைக்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ரூ.25 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
பாலுக்கு கொள்முதல் விலையாக மாட்டுப்பாலுக்கு ரூ.40–ம், எருமைப்பாலுக்கு ரூ.60–ம் வழங்க வேண்டும். அமராவதி, பரம்பிக்குளம், உப்பாறு ஆயக்கட்டுக்குட்பட்ட பாசன நிலங்களில் வணிக காரணங்களுக்காக விற்பனை செய்யப்பட்ட பாசன நிலங்களை ஆயக்கட்டிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பது உள்பட 30 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.