தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒரு பங்கு தண்ணீர் வழங்கப்படுகிறது மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒரு பங்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

Update: 2017-07-01 21:47 GMT

பெங்களூரு,

மாநிலத்தின் நலன்கருதி பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒரு பங்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி ஆறு மூலம் தமிழகத்திற்கு செல்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்கள் 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்தன. இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று தனியார் கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜூன் மாதம் 10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி), ஜூலை மாதம் 34 டி.எம்.சி., ஆகஸ்டு மாதம் 50 டி.எம்.சி. என்று இந்த 3 மாதங்களில் 94 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் காவிரியில் தமிழகத்துக்கு 134 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நாம் ஜூன் மாதத்தில் தண்ணீர் வழங்கவில்லை.

ஜூன் மாதம் அணைக்கு 34 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு கிடைத்தால் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. வழங்க வேண்டும். ஆனால், கடந்த மாதம் அணைக்கு 34 டி.எம்.சி.க்கு பதில் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே நமக்கு கிடைத்தது. அதில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டியுள்ளது.

வருகிற 11–ந் தேதி காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மாநிலத்தின் நலன்கருதி பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தின் சென்னையில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால், நமக்கு கிடைக்கும் தண்ணீரில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு ஒரு பங்கு வழங்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை பொறுத்து தமிழகத்துக்கு தண்ணீர் பங்கீட்டு வழங்கப்படும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்