மாநிலம் முழுவதும் 4 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்
வனத்திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் 4 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.
மும்பை,
வனத்திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் 4 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.
மராட்டியம் முழுவதும் கடந்த ஆண்டு வனத்திருவிழாவையொட்டி 5 கோடியே 54 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த ஆண்டில் ஜூலை 1–ந்தேதி முதல் 7–ந்தேதி வரை மட்டும் 3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. 3½ கோடி மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், 2 கோடி மரக்கன்றுகள் வனமில்லா பகுதிகளிலும் நடப்பட்டன.இந்தநிலையில் இந்த ஆண்டு வனத்திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் 4 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நேற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நவிமும்பை ஐரோலி பகுதியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அப்போது முதல்– மந்திரியுடன் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மாநில வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார், சத்குரு ஜக்கிவாசுதேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மும்பை தாராவியில் உள்ள மாகிம் நேட்சுரல் பார்க்கில் 500 மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இதேபோல மும்பையில் உள்ள 94 போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் அமைப்புகள் சார்பிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மும்பை ஒர்லி போலீஸ் அலுவலக பகுதியில் நடந்த விழாவில் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டு வைத்தார்.இதுதவிர மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடந்தது.