கோவில் திருப்பணியின் போது ஐம்பொன் சாமி சிலை கண்டெடுப்பு

மன்னார்குடி அருகே கோவில் திருப்பணியின் போது ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2017-07-01 22:45 GMT
கோட்டூர்,

மன்னார்குடி அருகே பெருவாழ்ந்தான் பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் தென்பகுதியில் அமைந்துள்ள சுவரை பணியாளர்கள் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 1½ அடி உயரமுள்ள ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பணித்துறையினர் உடனே மன்னார்குடி கோவில் நிர்வாக அதிகாரி விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் கோவில் குருக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையை மீட்டனர். அப்போது அந்த சிலை சுந்தரசேகரன் சாமி சிலை என்பதும், 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் மற்றும் இந்து அறநிலைய துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவிலில் திருப்பணியின் போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்