மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

குடவாசல் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-01 22:15 GMT
குடவாசல்,

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 30 நாட்களுக்குள் இந்த மதுக்கடை மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அதிகாரிகள் உறுதியளித்தப்படி மதுக்கடையை மூடவில்லை.

இந்த நிலையில் நேற்று, மதுக்கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெழியன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறந்த டாஸ்மாக் உதவி மேலாளர் காளிதாசன், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் அழகுதுரை, வருவாய் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட மதுக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்