ரோடியர் மில் தொழிலாளர்கள் போராட்டம்

வேலை வழங்கக்கோரி ரோடியர் மில் தொழிலாளர்கள் போராட்டம்

Update: 2017-07-01 21:45 GMT

புதுச்சேரி,

புதுவை ரோடியர் மில் கடந்த சில ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பணியில்லாமல் உள்ளனர். இந்த நிலையில் சி. யூனிட்டில் 20 பேருக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வேலை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிர்ணயித்த உற்பத்தியை அவர்கள் தரவில்லை என்று கூறி 20 பேரையும் வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் கூறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், மில்லை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடியர்மில் ஒருங்கிணைந்த ஊழியர் பேரவை சார்பில் மில் வாயில் அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த ஊழியர் பேரவை பொதுசெயலாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரவி முன்னிலை வகித்தார். முரளி, சங்கர், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் காரணமாக ரோடியர் மில்லின் உள்ளே ஊழியர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை(திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்