எம்.எல்.ஏ. முன்னிலையில் மதுக்கடைகளை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. முன்னிலையில் மதுக்கடைகளை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-01 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட முள்ளோடை – பரிக்கல்பட்டு சாலை, ஆராய்ச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் 10–க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளை மூடக்கோரி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் பொதுமக்கள் மதுக்கடைகளுக்கு நேற்று சென்றனர். அப்போது எம்.எல்.ஏ. முன்னிலையில் மக்கள் கடைக்குள் புகுந்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கி, தெருவில் வீசி உடைத்தனர். பொருட்களை உடைத்து சூறையாடினர்.

ஆவேசம் அடைந்த பெண்கள் கேன்களில் இருந்த மதுவை கீழே கொட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மதுக்கடையில் இருந்தவர்களையும் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் வில்லியனூர் அருகே அரியூர் – சிவராந்தகம் சாலையில் புதிதாக மதுக்கடை நேற்று காலை திறக்கப்பட்டது. இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திடீரென அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தல் மற்றும் தகர கொட்டகையை பிடுங்கி எறிந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள், கேன்கள் மற்றும் நாற்காலி, மேஜை உள்பட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் சிவராந்தகம் கிராமத்தில் உள்ள பழைய மதுக்கடையையும் அடித்து நொறுக்கி, அதன் கூரையை பிய்த்து எறிந்து சூறையாடினர். அப்போது மது குடிக்க வந்தவர்களும், மதுக்கடை ஊழியர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்