கோபியில் வறுமை வாட்டியதால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை

கோபி அருகே வறுமை வாட்டியதால் தாய்- மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். வாழவழியில்லாமல் சாகிறோம் என்று அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும் சிக்கியது.

Update: 2017-07-01 23:00 GMT
கோபி,

கோபி சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சாந்தி (வயது 35). இவர்களுடைய மகன் பார்த்திபன் (15). மகள் ராஜேஸ்வரி (13). முருகேசன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதனால் சாந்தி சமையல் வேலைக்கு சென்று வந்தார். பார்த்திபன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். ராஜேஸ்வரி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கணவர் இறந்துபோன பின்பு சாந்திக்கு சமையல் வேலைதான் கைகொடுத்து வந்தது. ஆனால் கடந்த 6 மாதமாக சமையல் வேலையும் சரிவர கிடைக்கவில்லை. மகன் கொண்டு வந்து கொடுத்த குறைந்த சம்பளத்தில் சிரமப்பட்டு குடும்பம் நடத்தி வந்தார்.

தற்கொலை முடிவு

சம்பாதிக்க வழியில்லாமல் சிறுவனை வேலைக்கு போகச்சொல்லிவிட்டு அதில் சாப்பிடுகிறோமே? என்று சாந்தி பல நாட்களாக வேதனைப்பட்டு வந்துள்ளார்.

சில நேரங்களில் சாப்பாட்டுக்கே பற்றாக்குறை ஏற்பட்டதால், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம். தற்கொலை செய்துகொள்ளலாமா? என்று தன்னுடைய மகளிடம் அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது.

மகன் எப்படியும் பிழைத்துக்கொள்வான், பெண்ணை படிக்க வைத்து நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்க தன்னால் முடியுமா? என்ற யோசனையிலேயே இருந்து வந்த சாந்தி, ‘பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கட்டும், நீயும்-நானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம்‘ என்று நேற்று முன்தினம் மாலை ராஜேஸ்வரியிடம் கேட்டுள்ளார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்தார்கள்...

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த சோர்வில் சாப்பிட்டுவிட்டு பார்த்திபன் படுத்து நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். அவர் அருகிலேயே தூங்குவதுபோலவே சாந்தியும், ராஜேஸ்வரியும் படுத்திருந்தார்கள். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் 2 பேரும் எழுந்து தங்களுடைய சாவுக்கு வறுமைதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை முதலில் சாந்தி குடித்துள்ளார். பின்னர் அழுதபடியே தன்னுடைய மகள் ராஜேஸ்வரிக்கும் கொடுத்தார். அவரும் வாங்கி குடித்து விட்டார்.

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு படுக்கையில் படுத்த இருவரும் சிறிது நேரத்தில் எழுந்து வாந்தி எடுத்துள்ளார்கள். சத்தம் கேட்டு பார்த்திபன் எழுந்து பார்த்தார். அப்போது தாயும், தங்கையும் வாந்தி எடுப்பதும், வீட்டுக்குள் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடப்பதையும் பார்த்து ‘அய்யோ அம்மா‘ என அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியின் தாய் லட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடிவந்தார்கள்.

இருவரும் இறந்தனர்...

உடனே அனைவரும் ஒன்று சேர்ந்து, சாந்தியையும், ராஜேஸ்வரியையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் அவரும் இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த தாய், தங்கையின் உடல்களை பார்த்து பார்த்திபன் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. வறுமையால் தாய், மகள் தற்கொலை செய்துகொண்டது கோபி சீதாலட்சுமிபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“எங்கள் சாவுக்கு வறுமையே காரணம்”

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு சாந்தியும், ராஜேஸ்வரியும் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளார்கள். அதில் அவர்கள் எழுதி இருப்பதாவது:-

‘எங்கள் சாவுக்கு வறுமையை தவிர வேறு யாரும் காரணம் அல்ல. சின்ன வயதிலேயே மகனை வேலைக்கு அனுப்பிவிட்டு அதில் சாப்பிடுகிறோம். நாளுக்கு நாள் சிரமம் அதிகரிக்கிறது. குறையவில்லை. வறுமையில் மகளை எப்படி வளர்க்க முடியும். பேர் சொல்ல பிள்ளை வேண்டுமே. அதனால் அவன் இருக்கட்டும். நாங்கள் சாகிறோம்.‘

இவ்வாறு எழுதி இருவரும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்