மதுரை வியாபாரி கொலை: போலீசார் தேடிய 2 பேர் தேனி கோர்ட்டில் சரண்

மதுரையில் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 2 பேர் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2017-07-01 22:30 GMT

தேனி,

மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஸ்ரீதர் (வயது 37). இவர், திருவிழா நடைபெறும் இடங்களில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் மதுரை அருகில் உள்ள விராட்டிப்பத்து அச்சம்பத்து சாலையோரத்தில் ஸ்ரீதர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை சுப்பிரமணியபுரம் நாகமுத்துபிள்ளை காலனியை சேர்ந்த மகாலிங்கம் மகன் பட்டு என்ற பட்டுராஜன் (32), அனுப்பானடி பூக்காரத் தெருவை சேர்ந்த திவான் மைதீன் மகன் முகமது திவான்சேட் (37) ஆகிய 2 பேர் நேற்று தேனி மாஜிஸ்திரேட்டு சுந்தரி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

பின்னர், அவர்கள் இருவரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்