வளசரவாக்கத்தில் உள்ள விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி வாலிபர் கைது

வளசரவாக்கத்தில் உள்ள விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-01 22:30 GMT

பூந்தமல்லி,

ஈரோட்டை சேர்ந்தவர் சத்யராஜ்(வயது 25). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வளசரவாக்கம், பூத்தப்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த மாதம் இவரது அறையில் இருந்த லேப்டாப் காணாமல்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ராயலா நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். போலீசார் நேற்று முன்தினம் வளசரவாக்கம் பிள்ளையார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோளில் லேப்டாப் பையை மாட்டிக்கொண்டு சந்தேகத்திற்கு இடமாக நடந்து சென்றுகொண்டு இருந்த நபரை அழைத்து விசாரித்தனர்.

இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் பெங்களூரை சேர்ந்த நவீன்குமார்(25) என்பதும், பல இடங்களில் உள்ள விடுதிகளில் இரவு நேரங்களில் தங்குவதுபோல் நடித்து, கதவு திறந்து இருக்கும் அறைகளில் இருந்து லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

பட்டதாரியான அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். அங்கு உரிய சம்பளம் கொடுக்காததால் இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்