காஞ்சீபுரம் அருகே ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
காஞ்சீபுரம் அருகே ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஜப்பானை சேர்ந்த நோரி குவாகோ (வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நிறுவனத்துக்கு அருகே நடை பயிற்சி மேற்கொண்டார்.
அவர் செல்போனில் பேசியபடியே நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் சிலர் அவரது செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் அதற்கு அவர் செல்போனை கொடுக்க மறுத்தார்.
உடனே அந்த மர்மமனிதர்கள் அவரது இடது கைவிரலை கத்தியால் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
இதுபற்றி அவர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடிவருகிறார்.