சரக்கு–சேவை வரி திட்ட தொடக்க விழாவை பாராளுமன்ற மத்திய ஹாலில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
சரக்கு–சேவை வரி திட்ட தொடக்க விழாவை பாராளுமன்ற ஹாலில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
சரக்கு–சேவை வரி திட்ட தொடக்க விழாவை பாராளுமன்ற ஹாலில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்–மந்திரி சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் 3 நாட்கள் மட்டுமே நள்ளிரவுகளில் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டியும், நமக்கு சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் விழா நடத்தப்பட்டது.ஆனால் இப்போது சரக்கு–சேவை வரி திட்ட தொடக்க விழாவை பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?. விளம்பரத்திற்காக மத்திய அரசு இந்த விழாவை நடத்துகிறது. நாங்கள் சரக்கு–சேவை வரி திட்டத்தை எதிர்க்கவில்லை. இதை அமல்படுத்துவதில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
பாராளுமன்ற மத்திய ஹாலில் விழா நடத்துவதன் மூலம், தாங்கள் தான் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வந்திருப்பதை போல் ஆளும் பா.ஜனதா அரசு தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி செய்கிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் இந்த சரக்கு–சேவை வரி திட்டத்தை கொண்டு வந்தது.இந்த திட்டத்தால் கர்நாடகத்தின் வரி வருவாய் குறையும் என்ற ஒரு அச்சம் உள்ளது. ஒருவேளை வரி வருவாய் குறைந்தால், அதை 5 ஆண்டுகளுக்கு சரிசெய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.