7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி வடிசாராய ஆலை ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்

7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி வடிசாராய ஆலை ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-30 22:45 GMT

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே ஆரியப்பாளையத்தில் புதுவை அரசின் சார்பு நிறுவனமான வடிசாராய ஆலை உள்ளது. இங்கு நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என மொத்தம் 150–க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் சாராயம் புதுவையின் பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 100 சாராய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தங்களுக்கும் சம்பளம் வழங்கவேண்டும் என்று வடிசாராய ஆலை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஆலையின் சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதுபற்றி அவர் நடவடிக்கை எடுப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதி கூறினார். ஆனால் 7–வது ஊதியக்குழு பரிந்துரை சாராய ஆலை ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.

இதையடுத்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக சாராய ஆலை ஊழியர்கள் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து ஆலை நிர்வாகம், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. எனவே தாங்கள் அறிவித்தப்படி வடிசாராய ஆலை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 2–வது நாளாக அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை வளாகத்தில் திரண்ட ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சாராயம் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

சாராய கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்வது பாதித்துள்ளதால், சாராயக்கடை உரிமையாளர்கள், ஆலைக்கு வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்