டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-06-30 20:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலையில் கெச்சிலாபுரம் கிராம மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊர் நாட்டாண்மை கந்தசாமி, அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி கலெக்டர் அனிதா அலுவலக பணியாக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை


தொடர்ந்து கெச்சிலாபுரம் கிராம மக்கள் தங்களது ஊரில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வற்றி விட்டது. எனவே தங்களது ஊருக்கு கூடுதலாக சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், கோட்ட நிர்வாக பொறியாளர் எட்வர்டு அமல்ராஜ், உதவி நிர்வாக பொறியாளர் செந்தூர்பாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், கெச்சிலாபுரத்துக்கு வாரத்துக்கு 3 நாட்கள் தலா 10 ஆயிரம் லிட்டர் வரையிலும் குடிநீர் வழங்கப்படுகிறது. பருவமழை பெய்தவுடன் கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்