ஆவின் பாலகத்தில் பீர்பாட்டில்கள் பறிமுதல்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்தனர்.
வேலூர்,
வேலூர் பழையபஸ்நிலையத்தில் உள்ள ஆவின்பாலகத்தில் நேற்று உணவுபாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்தனர். அப்போது அங்கு பீர்பாட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் வெகுதூரம் சென்று மதுகுடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடப்பட்ட கடைகளை மற்ற இடங்களில் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே சிலர் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்பனைசெய்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே மூடப்பட்ட கடைகள் இருந்த இடங்களில் மதுபாட்டில்கள் தாராளமாக கிடைக்கிறது.இந்த நிலையில் வேலூர் மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், உணவுபாதுகாப்பு அதிகாரிகள் கவுரிசுந்தர், கொளஞ்சி, ராஜேஷ், நாகேஸ்வரன் ஆகியோர் வேலூர் பழையபஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுபொருட்கள் குறித்து ஆய்வுசெய்தனர்.
அப்போது பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் பாலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய சென்றனர். அப்போது அங்கு 12 பீர்பாட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பீர்பாட்டில்கள் குறித்து கடை விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், ஒருவர் வாங்கிவந்து வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாஸ்மாக் மேலாளருக்கு, உணவுபாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்து பீர்பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.