ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான பேச்சு வார்த்தையின்போது உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றில் கடந்த 5–ந் தேதி மணல் அள்ள அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ள பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதையடுத்து ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில், நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 12–ந் தேதி மனு கொடுத்தனர். மேல் நடவடிக்கை இல்லாததால் 13–ந் தேதி மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள், நீரேற்று பாசன சங்கத்தினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தைஇந்த நிலையில் நேற்று காலை ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு லாரிகள் வெளியேறின. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஒருவந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன் தலைமையில் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காலை 10 மணியளவில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவர் செல்ல.ராசாமணி, மோகனூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் நவலடி உள்பட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோது உதவி கலெக்டரிடம், விவசாயிகள் சார்பில் செல்ல.ராசாமணி பேசினார். அப்போது அவர், “மோகனூர் பகுதியில் விதிமுறையை மீறி மணல் அள்ளப்பட்டு உள்ளது. ஒரு மீட்டர் ஆழம் அள்ள வேண்டிய இடத்தில் 25 மீட்டர் ஆழம் மணல் அள்ளப்பட்டு உள்ளது. அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க வேண்டும். ஒருவந்தூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். ஒரு பகுதியில் மணல் அள்ள வேண்டும் என்றால் முறையாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை. மோகனூர் பகுதியில் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்புள்ள மணல் அள்ளப்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை“ என கேட்டார்.
தள்ளுமுள்ளுமேலும் பேச்சுவார்த்தை நடைபெறும்போதே மணல் அள்ளிக்கொண்டு உள்ளார்கள். உடனே நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்ததால் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய உதவி கலெக்டர் ராஜசேகரன், “மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறையில் முறையாக அனுமதி பெற்றுதான் அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ளப்படும்” என்று கூறினார்.
அப்போது பொதுமக்களும், விவசாயிகளும் மணல் அள்ளக்கூடாது என்றும் மணல் குவாரியை மூடவேண்டும் எனவும் கோஷம் போட்டு உதவி கலெக்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டதோடு, தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதனால் அந்த பகுதியை விட்டு உதவி கலெக்டரை போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர்.
முற்றுகை–தர்ணாதொடர்ந்து பொதுமக்கள் ஒருவந்தூர் காவிரி ஆற்றிக்குள் சென்று மணல் அள்ளும் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு மணல் அள்ளும் இடத்திற்கு செல்லும் பாதையையும் முற்றுகையிட்டு அங்கு தரையில் அமர்ந்து, மணல் அள்ளக்கூடாது என தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், “காவிரி ஆற்றில் பந்தல் அமைத்து சமையல் ஏற்பாடு செய்து மின்விளக்கு பொருத்தி, இரவு, பகலாக எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். மணல் குவாரியை மூடாமல் ஓயமாட்டோம். எந்த விளைவையும் சந்திப்போம். மீறி மணல் குவாரி செயல்பட்டால் அனைவரும் எங்களது ரேஷன்கார்டை அரசிடம் ஒப்படைத்து விட்டு அகதிகளாக வாழ்வோம்” என தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ராமசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, சுஜாதா, நாமக்கல் குற்றப்பதிவேடு துணை சூப்பிரண்டு ஜான்சுந்தர், மோகனூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் ஏற்பட்டு ஆற்றில் இருந்து மணல் அள்ளாமல் 2 பொக்லைன் எந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் ஆற்றில் மீண்டும் மணல் அள்ளினால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மாலை 6 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.