ஊனத்தினை கண்டறிதலுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்ப நிலையிலேயே ஊனத்தினை கண்டறிதலுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

Update: 2017-06-16 23:29 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்ப நிலையிலேயே ஊனத்தினை கண்டறிதலுக்கான பயிற்சி முகாம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரக துணை இயக்குனர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:– தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திலும், மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்திலும் முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டு இந்த 2 இடங்களிலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே ஊனத்தினை கண்டறிதலுக்கான பயிற்சி முகாம் சமூக நலத்துறையின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தபட்டு முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளும், உதவிகளும் அளிக்கப்பட உள்ளன. இதனை முன்னுதாரணமாக கொண்டு தமிழக அரசு இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த உள்ளது.

எளிதில் சரி செய்து விடலாம்

பிறக்கின்ற குழந்தைகளை குழந்தைப்பருவத்தில் ஆரம்ப நிலையிலேயே அக்குழந்தைகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கண்டறிந்து அதில் ஏதேனும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே உரிய பயிற்சி அளித்து அதனை சரிசெய்வதற்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சிகள் இப்பயிற்சி முகாமில் அளிக்கப்படுகின்றன.

சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு விட்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளின் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆவார்.

முழுமையாக பயன்படுத்த வேண்டும்

அத்தகைய பணியாளர்களுக்கு இச்சிறப்பு பயிற்சி அளிப்பதன் மூலம் தாங்கள் பணிபுரியும் பகுதியில் உள்ள குழந்தைகளின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான எளிமையான சிகிச்சைகள் அளித்து மற்ற குழந்தைகளை போல அவர்களையும் வளர்ப்பதற்கு உரிய அறிவுரைகளும், ஆலோசனைகளும் அவர்களது பெற்றோர்களுக்கு அளித்திட ஏதுவாக இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முகாமினை அங்கன்வாடி பணியாளர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் ஷீபா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) செண்பகச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட திட்ட இயக்குனர் மலர்விழி, நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மறுவாழ்வு உதவியாளர் திருமூர்த்தி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.எஸ்.பாலமுருகன், பி.பாலமுருகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்