தர்மபுரி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரை மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து தர்மபுரி தலைமை தபால் நிலைய வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தும்பாராவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சாமுண்டீஸ்வரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சங்க மாநில பொருளாளர் சக்ரவர்த்தி, மாநில துணைத்தலைவர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பெருமாள், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், தட்டச்சு எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு 18 சதவீத வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைவிட வேண்டும்இதேபோல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிறவகை உபகரணங்களுக்கு 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் வரிவிதிக்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வரிவிதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை தவிர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.