பெயர் பலகையை அடித்து நொறுக்கினர் மதுக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்

வில்லியனூரில் மதுக்கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடையின் ஷட்டரை இழுத்து மூடி பெயர் பலகையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-16 22:00 GMT
வில்லியனூர்,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட வேறு இடங்களில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வில்லியனூர் புறவழிச்சாலையில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில், ஒன்று வில்லியனூர் - கூடப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே இடம் மாற்றப்பட்டு இயங்கியது. இங்கு மது குடிக்க வருபவர்களால் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் இப்பகுதியில் மேலும் ஒரு மதுக்கடையை திறக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

திடீர் சாலை மறியல்

இதையொட்டி புதிதாக அமைக்க உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே உள்ள மதுக்கடையை மூடக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழ்வளவன், ஆதவன், எழில்மாறன், வாகையரசு ஆகியோர் தலைமையில் நேற்று காலை வில்லியனூர் - கூடப்பாக்கம் சாலையில் திரண்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மதுக்கடையின் ஷட்டரை இழுத்து மூடி, பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுக்கடையை அகற்றுவது குறித்து கலெக்டர், கலால் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வில்லியனூர் - கூடப்பாக்கம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்