சிறுவாணி ரோட்டில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சிறுவாணி ரோட்டில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பேரூர்,
சிறுவாணி ரோட்டில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்யாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பேரூர் அருகே உள்ள காளம்பாளைம் பகுதியில் சிறுவாணி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த 2 வாரங்களாக சிறுவாணி குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு 7 மணிக்கு சிறுவாணி சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇதுகுறித்த தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தீத்திபாளையம் ஊராட்சி செயலாளர் கவிதகலா மற்றும் பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் உடனடியாக சிறுவாணி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) கண்டிப்பாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.