குப்பை கழிவுகள் அகற்றப்படாததால் பிரச்சினை: ஊட்டி படகு இல்லத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
ஊட்டி படகு இல்லத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டி படகு இல்லம் ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரு பிரிவுகள
ஊட்டி
ஊட்டி படகு இல்லத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டி படகு இல்லம்ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரு பிரிவுகளாக தரம் பிரித்து குப்பைகளை சுகாதார பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். இதில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. அந்த உரத்தை விவசாயிகள் வாங்கி சென்று தங்கள் விளைநிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே குப்பை தொட்டி ஒன்று உள்ளது. தற்போது அந்த குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக்கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. சுற்றுலா தலமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற குப்பைக்கழிவுகள் ஆங்காங்கே கிடப்பதால் அவர்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். மேலும் கடும் தூர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சுகாதார சீர்கேடுஅதனை தொடர்ந்து குப்பை தொட்டியில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மாடுகள் வந்து மேய்கின்றன. இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள் இறந்து வருகின்றன. சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் ஊட்டி படகு இல்ல பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–
ஊட்டி படகு இல்லத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுபொருட்களை நகராட்சி சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் அகற்றுவது வழக்கம். ஆனால், கடந்த சில தினங்களாக படகு இல்ல பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுபொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதுடன், பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் ஊட்டியில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவக்கூடிய நிலையும் உள்ளது. குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்றால்? கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.
பொதுவாக குப்பைக்கழிவுகள் படகு இல்லத்தில் குவிந்து வருவதற்கும், அகற்றப்படாமல் இருப்பதற்கும், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம். எனவே, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா தலங்களில் முறையாக கழிவுப்பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.