வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலம்

வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-06-16 22:45 GMT
நாகர்கோவில்,

கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கான முத்திரை கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். பிறப்பு- இறப்புகளை ஒரு ஆண்டு காலத்துக்குள் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அவற்றை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலமாக பதிவு செய்யப்பட்டு வந்ததை, தமிழக அரசு கோட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் இளம் வக்கீல்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் இந்த உத்தரவையும் திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்ட நடவடிக்கை குழு அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் குமரி மாவட்ட வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவில், இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை கோர்ட்டு வக்கீல்களும் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்து, டதி பள்ளி சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

2200 பேர் பங்கேற்பு

ஊர்வலத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வக்கீல் மகேஷ் தலைமை தாங்கினார். குழித்துறை வக்கீல் சங்க தலைவர் சுரேஷ், தக்கலை வக்கீல் சங்கத்தலைவர் மத்தியாஸ், இரணியல் போஸ், பூதப்பாண்டி சுரேஷ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அனைத்து வக்கீல் சங்கங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலக வாயிலை சென்றடைந்ததும் அங்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. அப்போது வக்கீல் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் கோரிக்கைளை விளக்கி பேசினர்.

பின்னர் குமரி மாவட்ட வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மகேஷ் தலைமையில் சில வக்கீல்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். அதன்பிறகு வக்கீல்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் நாகர்கோவில், இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை, பூதப்பாண்டி கோர்ட்டு வக்கீல் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 2200 பேர் பங்கேற்றதாக கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மகேஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்