புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கலுக்கு அடுத்தமாதம் சிறப்பு முகாம்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கலுக்கு அடுத்தமாதம்(ஜூலை) 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

Update: 2017-06-16 20:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கலுக்கு அடுத்தமாதம்(ஜூலை) 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், என அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விடுபட்ட வாக்காளர் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்து. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;–

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தகுதி வாய்ந்த வாக்காளர்களை பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு அடுத்த மாதம்(ஜூலை) 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை சிறப்புப்பணி நடைபெற உள்ளது. மேலும், 9.7.2017 மற்றும் 23.7.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும், ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றைக் கண்டறிய வேண்டும்.

வாக்காளர் அட்டை

அதன்படி, மாவட்டத்தில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களை சேர்க்கவும், 20 வயது முதல் 69 வயது வரை உள்ள இடம்பெயர்தல், இரட்டைப்பதிவு மற்றும் இறந்துபோன வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய பாகம் வாரியாக பட்டியல்கள் தயார் செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்படும். வாக்காளர்கள் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா, தாசில்தார் (தேர்தல்) ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தி.மு.க. கணேசன், தேசியவாத காங்கிரஸ் பொன்ராஜ், கம்யூனிஸ்டு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்