தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம்

வந்தவாசி தாலுகா கீழ்நர்மா கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

Update: 2017-06-16 00:08 GMT

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா கீழ்நர்மா கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் இரும்பேடு, முருக்கேரி, விளாங்காடு, ஆரியாத்தூர், கீழ்பாக்கம், கீழ்நர்மா ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரும்பு விவசாயிகளாக உள்ளனர். கடந்த 6 மாதங்களாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை மற்றும் கடன் தொகை ஆகியவை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வந்தவாசி மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.70 லட்சத்தை கீழ்நர்மா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சுமார் 150–க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் நேற்று கடன் சங்கத்தை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனக்கூறியதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

முற்றுகை போராட்டம் சுமார் 2½ மணி நேரம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்