ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 54 சதவீத வாக்கு இருக்கிறது

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 54 சதவீத வாக்குகள் இருப்பதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-15 23:57 GMT

மும்பை,

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 54 சதவீத வாக்குகள் இருப்பதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25–ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17–ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜனாதிபதி தேர்தலையொட்டி, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக 54 சதவீத வாக்குகள் இருக்கின்றன. மேலும் சில கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கின்றன. ஆகையால், வாக்கு எண்ணிக்கை 65 சதவீதத்தை நெருங்கும்.

மிரட்ட முடியாது

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆனபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், நாங்கள் ஏற்கனவே 50 சதவீத வாக்குகளுக்கு மேல் வைத்திருக்கிறோம். ஆகையால், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. யாரும் எங்களை மிரட்ட முடியாது.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

கடந்த 2012–ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி 7 லட்சத்து 13 ஆயிரத்து 763 வாக்குகளும், அவரை எதிர்த்து களமிறங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா 3 லட்சத்து 15 ஆயிரத்து 987 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்