சப்–இன்ஸ்பெக்டர், வக்கீலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு
புகாரில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், வக்கீலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
புதுச்சேரி,
புதுவை சாரம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெண் ஒருவரிடம் பாஸ்போர்ட் வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அந்த புகாரில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று அப்போது உருளையன்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் கேட்டார்.
அதன்படி கடந்த 2008–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18–ம் தேதி ரமேசிடம் இருந்து பணத்தை வாங்கி ஸ்ரீதரிடம் வக்கீல் அம்பலவாணன் கொடுத்தார். ஏற்கனவே ரமேஷ் தெரிவித்து இருந்த புகாரின் அடிப்படையில் மறைந்து இருந்து கண்காணித்த சிபி.ஐ. போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் வக்கீல் அம்பலவாணனுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு நீதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தியது. அப்போது மேலும் நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்திய 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார், 2 ஊர்காவல் படையினர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.
3 ஆண்டுகள் சிறைமோசடி புகாரில் இருந்து விடுவிக்க ரமேசிடம் இருந்து லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உடந்தையாக இருந்த வக்கீல் அம்பலவாணன் ஆகியோருக்கு ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி ராமதிலகம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.