பிளாஸ்டிக் அரிசி தொடர்பான புகார்: 181 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 181 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 6 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கவிக்கும

Update: 2017-06-15 22:59 GMT

நாமக்கல்,

பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 181 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 6 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கவிக்குமார் கூறினார்.

அதிகாரிகள் ஆய்வு

வடமாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அரிசி கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாஸ்கர், சதீஷ்குமார், ராமசுப்பு, நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நாமக்கல்லில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஒரு டம்ளரில் தண்ணீர் நிரம்பி அதில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அரிசியை எடுத்து போட்டனர். அப்போது அவை தண்ணீரில் மூழ்கிவிட்டன. எனவே பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பதை உறுதி செய்தனர்.

181 கடைகளில் ஆய்வு

இந்த ஆய்வு குறித்து நியமன அலுவலர் கவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:– நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரிசி கடைகளில் கடந்த சில நாட்களாக 4 குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தி வருகிறோம். இதுவரை 181 அரிசி கடைகளில் ஆய்வு நடத்தி உள்ளோம்.

அவற்றில் தரம் குறைவாக இருந்த 6 உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் பிளாஸ்டிக் அரிசி என்பது இல்லை. எனவே பொதுமக்கள் அது குறித்து அச்சப்பட தேவையில்லை.

7 பேர் மீது வழக்குப்பதிவு

இதேபோல பாலின் தரத்தை அறியவும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி வருகிறோம். இதுவரை பால் வினியோகஸ்தர்கள், வியாபாரிகளிடம் இருந்து 28 மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து உள்ளோம்.

அதில் 7 மாதிரிகளில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதும், தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்