ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்கள் தாமதம் முன்னறிவிப்பு இல்லாததால் பயணிகள் அவதி

மதுரை கோட்ட ரெயில்வேயில் சுரங்கப்பாதை பணிக்காக முன்னறிவிப்பு இல்லாமல் ராமேசுவரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

Update: 2017-06-15 23:00 GMT
மதுரை,

மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில் பாதையில் சிலைமான் அருகே தட்டான்குளத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்கள் சிலைமான்- திருப்புவனம் இடையே 20 கி.மீ.வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுரங்கப்பாதை பணிக்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் நேற்று திடீரென்று மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இது குறித்த தகவல்கள் பயணிகளுக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை.

குறிப்பாக, நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56223) காலை 6.50 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும் காலை 6.30 மணிக்கே கொடுக்கப்பட்டது.

5½ மணி நேரம் தாமதம்

இதனால் இந்த ரெயிலில் மதுரையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு தினமும் வேலைக்கு சென்று வரும் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

இது குறித்து ரெயில்நிலைய டிக்கெட் மையம், தகவல் மையம் ஆகியவற்றில் இருந்த ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த ரெயிலில் செல்ல டிக்கெட் எடுத்திருந்த பயணிகளுக்கு முழுக்கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ரெயில் சுமார் 5½ மணி நேரம் தாமதமாக நேற்று மதியம் 12.15 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

மானாமதுரையிலும் நிறுத்தம்

அதேபோல, மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு (வ.எண்.56724) காலை 5.30 மணிக்கு வழக்கம் போல் பாசஞ்சர் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் காலை 7.50 மணிக்கு மானாமதுரை ரெயில்நிலையம் வந்தடைந்தது. ஆனால், மானாமதுரை ரெயில்நிலையத்தில் சுமார் 1¼ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், இந்த ரெயிலில் வழக்கமாக மதுரை வரும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து அங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மதியம் 12.55 மணிக்கு மதுரை வந்தடைந்தது. அதாவது காலை 9.20 மணிக்கு வரவேண்டிய ரெயில் சுமார் 3½ மணி நேரம் தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது.

அடுத்தடுத்து தாமதம்

இதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு ராமேசுவரம் புறப்பட வேண்டிய ரெயில் (வ.எண்.56721) மதியம் 1.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மதியம் 1.50 மணிக்கே அந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டது.

அதேபோல, மதுரையில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (வ.எண்.56725) இரவு 8.20 மணிக்கே புறப்பட்டது.

இதனால் இந்த ரெயில் களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதுபோன்ற சூழ்நிலைகளில் ரெயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் அனைவரும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அவசரமாகச்செல்ல வேண்டியவர்கள் பஸ்சைப்பிடித்தாவது சென்றிருப்பார்கள் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்