மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை

மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி கிருங்காகோட்டை கிராம மக்கள் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-15 22:45 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ளது கிருங்காகோட்டை. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான புரவி எடுப்பு திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யனார் கோவிலில் நடைபெற்றது. பின்னர் இந்த விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த கிராம கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்காக ஊர்மந்தை என்ற இடத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

தாலுகா அலுவலகத்தில் முற்றுகை

இந்தநிலையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் ஊர் தலைவர் ராசியப்பன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். ஆனால் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிருங்காகோட்டை கிராம இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு மஞ்சுவிரட்டு அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கார்டு

முன்னதாக கிராமமக்கள் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் தங்களது ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் அரசிடம் திரும்ப கொடுப்பதாக தெரிவித்து அதனை கையில் எடுத்து வந்திருந்தனர். இதனையடுத்து தாசில்தார் சுமதி என்ற தனலட்சுமி, சிங்கம்புணரி போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராமமக்களில் குறிப்பிட்ட சிலர் சென்று தாசில்தாரிடம் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, போராட்டம் நடத்திய கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

ஏமாற்றம்

கிராமமக்கள் கூறும்போது, கோர்ட்டு தடை மற்றும் சில காரணங்களால் கிருங்காகோட்டையில் மஞ்சுவிரட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடைபெறும் என்று கிராமமக்கள் நம்பிக்கையில் இருந்தனர். கிராம கமிட்டியினர் சார்பில் நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக வாடிவாசல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்தன. ஆனால் கலெக்டர் அனுமதி வழங்காததால் மஞ்சு விரட்டு நடைபெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு நிரந்தர சட்டம் இயற்றியும், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்