ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 200 மரங்களை வெட்டி தனியார் தோட்டத்துக்கு பாதை அமைப்பு

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அனுமதியின்றி 200 மரங்களை வெட்டி தனியார் தோட்டத்துக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2017-06-15 22:15 GMT

தேனி,

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைப்பகுதியானது தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த இடமாக உள்ளது. மேலும் இங்கு தனியாருக்கு சொந்தமான காபி தோட்டங்களும் உள்ளன.

இந்த மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களிலும், வனப் பகுதிகளிலும் மரங்கள் வெட்டப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. கடந்த 2013–ம் ஆண்டு ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. அப்போது மதுரை மண்டல வன பாதுகாவலர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் இந்த வனப்பகுதியில் முகாமிட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

வெட்டப்பட்ட மரங்கள்

2013–ம் ஆண்டு மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளம் அழிக்கப்பட்டதன் விளைவாக ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் அதன்பிறகு வந்த ஆண்டுகளில் சராசரி மழை அளவு குறைந்து விட்டது. இதனால், இந்த வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டுவதை தடுக்கவும், இயற்கை வளங்கள் பறிபோவதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள கீழ்மணலாறு பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஒத்தைவீடு என்ற பகுதியில் இருந்து தனியார் தோட்டத்திற்கு பாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சுமார் 200 மரங்களை வெட்டி பாதை அமைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வெட்டப்பட்ட மரங்களில் வனத்துறையினர் அடையாள எண் எழுதினர். மேற்கொண்டு மரங்களை வெட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வனத்துறையினர் நடவடிக்கை

இதுகுறித்து மேகமலை வன உயிரின காப்பாளர் அனந்தகுமாரிடம் கேட்ட போது, ‘சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு பாதை அமைப்பதற்காக மரங்களை அனுமதியின்றி வெட்டி உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி கிடையாது. தனியார் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு கலெக்டர் தான் அனுமதி வழங்க வேண்டும். எனவே இதுதொடர்பாக கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்’ என்றார்.


மேலும் செய்திகள்