கணபதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.சிக்னல் வழியாக செல்ல அனுமதி
மேம்பால பணி முடிந்ததை தொடர்ந்து கணபதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.சிக்னல் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
அதுபோன்று புரூக் பாண்ட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் இருபுறத்திலும் சுரங்கப்பாதைக்குள் செல்லலாம்.
காந்திபுரம் மேம்பாலம்கோவை மாநகர பகுதியில் வாகன எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள பார்க்கேட் சிக்னலில் இருந்து ஆம்னிபஸ் நிலையம் வரை ஒரு மேம்பாலமும், காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள கல்யாண் பகுதியில் இருந்து ராம கிருஷ்ணா சிக்னல் வரை மற்றொரு மேம்பாலமும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து மாற்றம்நஞ்சப்பா ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் பகுதியில் மட்டும் மேம்பாலத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு இணைப்பு செய்யப்பட வேண்டி இருந்தது. இந்த பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதாவது காந்திபுரத்தில் இருந்து கணபதி செல்லும் பஸ்கள் அனைத்தும் 100 அடி ரோட்டில் சென்று, 2–வது தொடர்ச்சி சாலை வழியாக ராதாகிருஷ்ணன் ரோட்டை அடைந்து பின்னர் சத்தி ரோட்டில் சென்றன. அதுபோன்று கணபதியில் இருந்து வரும் வாகனங்கள் ஆவாரம்பாளையம் ரோடு, ராம கிருஷ்ணா சிக்னல் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்ததன. தற்போது முதற்கட்ட மேம்பால பணி முடிவடைந்தது. இதனால் மீண்டும் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:–
ஜி.பி.சிக்னல் வழியாக செல்லலாம்மேம்பால பணிக்காக கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது நஞ்சப்பா ரோட்டில் உள்ள முதலாவது மேம்பால பணி முடிவடைந்ததை தொடர்ந்து, கணபதியில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் டெக்ஸ்டூல் பாலம், ஜி.பி.சிக்னல் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் காந்திபுரத்தில் இருந்து கணபதி செல்லும் வாகனங்கள் முன்பு அறிவித்தபடி 100 அடி ரோடு, ராதாகிருஷ்ணன் சாலை வழியாகதான் செல்ல வேண்டும். அந்தப்பகுதியில் இன்னும் வேலை இருப்பதால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்துவிடும். அதன் பின்னர் அனுமதிக்கப்படும்.
மேம்பால சுரங்கப்பாதைஅவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையில் இருந்து புரூக் பாண்ட் ரோட்டிற்கு செல்லவும், அங்கிருந்து சுரங்கப்பாதைக்கு வரவும் தனித்தனி பாதை உள்ளது. இந்த ரோடு ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால், சுரங்கப்பாதையில் இருந்து புரூக்பாண்ட் ரோட்டிற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு இருந்தது.
அந்த ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மற்றொரு பாதை வழியாகதான் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, பின்னர் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றன. சில நேரத்தில் இந்த ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அடைத்து வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பாதை யையும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இருபுறத்திலும் செல்லலாம்அதன்படி நேற்று அந்த பாதை திறக்கப்பட்டது. அதன்படி புரூக் பாண்ட் ரோட்டில் இருந்து சுரங்கப் பாதைக்கு செல்ல இருபுறத்திலும் உள்ள பாதையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் சுரங்கப்பாதையில் இருந்து அந்த ரோட்டிற்கு செல்ல அனுமதி இல்லை.
இதை கண்காணிக்க அங்கு போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.