ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-06-15 22:45 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை மொத்தம் 51 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பெண் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேரும் முறையாக பள்ளிக்கு வருவது இல்லை என்று புகார் கூறி நேற்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்து திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) லோகமணி, கும்மிடிப்பூண்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிராஜசேகர் ஆகியோர் மேற்கண்ட பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சமரச பேச்சுவார்த்தை கூட்டம்

பின்னர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணபதி ஆகியோர் முன்னிலையில் அங்கு வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர்.

அப்போது மேற்கண்ட பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இது போன்ற போராட்டமும், பேச்சுவார்த்தை கூட்டமும் கல்வித்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை என்று பெற்றோர்கள் கல்வி துறை அதிகாரிகள் மீது புகார் கூறினர்.

வெளிநடப்பு

மேலும் தலைமையாசிரியர் பள்ளியை முறையாக நிர்வகிப்பது இல்லை, வகுப்பு ஆசிரியரும் மாணவர்களிடம் முறையாக நடந்து கொள்வது இல்லை என்று பெற்றோர்கள் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இதற்கு கல்வி அதிகாரிகள் அளித்த பதில் பெற்றோர்களுக்கும் கிராம நிர்வாகிகளுக்கும் திருப்திகரமாக இல்லை.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், மாணவர்களின் நலன் கருதி சில வி‌ஷயங்களை முன்வைத்தோம். நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் உங்கள் விருப்பம். இது தவிர பள்ளிக்கு படிக்க வரும் மாணவ–மாணவிகளுக்கு எதாவது பிரச்சினை என்றால் அதற்கு அதிகாரிகள்தான் முழு பொறுப்பு என கூறி விட்டு, கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்