சோழவரம் அருகே போலி ‘ஆயில்’ தொழிற்சாலைக்கு ‘சீல்’ 5 பேர் கைது
போலி ‘ஆயில்’ தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்,
சோழவரத்தை அடுத்த தேவனேரி பகுதியில் கலப்பட ஆயில் தொழிற்சாலை செயல்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தவுப்படி பொன்னேரி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) அரவிந்தன், மாவட்ட வழங்கல் அதிகாரி சந்தியா, சோழவரம் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு தொழிற்சாலையில் வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஆயில் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
5 பேர் கைதுஇதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்களான திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை, வெங்கடேசன், கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன், பெரியபாளையத்தை சேர்ந்த மாரி, திருவேற்காட்டை சேர்ந்த நயினார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த உபகரணங்களை பறிமுதல் செய்து தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். அரக்கோணத்தில் இருந்து பேரல்களில் கழிவு ஆயில்களை கொண்டு வந்து இங்கு சுத்திகரித்து வந்துள்ளனர். பின்னர் அதனை வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.