திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: 2 லாரிகள் எரிந்து நாசம்

திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகள் எரிந்து நாசமானது.

Update: 2017-06-15 22:15 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி கணபதி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 53). இவர் வெள்ளவேடு அருகே உள்ள சொக்கநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் மற்றும் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். அந்த குடோனில் 5 பெண்கள் உள்பட 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் வேலையை முடித்துக்கொண்டு குடோனை பூட்டிவிட்டு சென்றனர். அப்போது, அந்த குடோனுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச்செல்வதற்காக 2 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எரிந்து நாசம்

இந்தநிலையில், நள்ளிரவில் திடீரென அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, ஆவடி, திருவூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் அந்த குடோனுக்குள் நிறுத்தப்பட்டிருந்த 2 லாரிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா? என வெள்ளவேடு சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்