திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2017-06-15 00:14 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 19–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. இதில் திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 18 வயது முதல் 23 வயது நிரம்பிய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலையில் நடந்தது. உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பதாகைகள்...

உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணாசிலை, காந்தி சிலை வழியாக சென்று அருணாசலேஸ்வரர் கோவில் முன்பாக நிறைவடைந்தது. இதில் சண்முகா மேல்நிலைப்பள்ளி, டேனிஷ்மி‌ஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் படையினர் பேண்டு வாத்தியம் முழங்கியபடி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் முன்னாள் படைவீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்