திருவண்ணாமலை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 18 இடங்களில் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 18 இடங்களில் சாலை மறியல் நடந்தது.

Update: 2017-06-15 00:14 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 18 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதுதொடர்பாக 14 பெண்கள் உள்பட 604 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்களை கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன் தலைமையில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை, மாநில தொ.மு.ச. செயலாளர் சவுந்தரராஜன், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் குட்டி புகழேந்தி உள்பட 100–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

போளூர்–சேத்துப்பட்டு

போளூரில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகரன் தலைமையிலான தி.மு.க.வினர் 35 பேர் போளூர் பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

சேத்துப்பட்டில் 4 வழிச்சாலையில் நகர செயலாளர் முருகன் தலைமையில் 54 பேர் சாலை மறியல் செய்தனர். அவர்களை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம்–செங்கம்

கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் தலைமையில் கண்ணமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். சந்தவாசல் பகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் தி.மு.க.வினர் 100–க்கும் மேற்பட்டோர் செங்கம் பஸ்நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் செங்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆரணி

ஆரணியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலை அருகில் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, நகர செயலாளர் ஏ.சிமணி, ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

604 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 604 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்