3 அடி உயர பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மும்பையில் 3 அடி உயர பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2017-06-14 23:51 GMT

மும்பை,

மும்பையில் 3 அடி உயர பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

டாக்டர் எச்சரிக்கை

மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் லாங்கே(வயது35), இவரது மனைவி மீரா(21). இரண்டு பேர்களுமே குள்ளமானவர்கள். மனைவி 3.3 அடியும், கணவர் 3.5 அடி உயரம் கொண்டவர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீரா கர்ப்பம் அடைந்தார். இந்த வி‌ஷயத்தை அவர்களது குடும்ப டாக்டரிடம் தெரிவித்தார்கள். ஆனால் டாக்டரோ மீராவின் உடல்நிலையை கருதி குழந்தை தற்போது வேண்டாம் என்றும், உடனே கருகலைப்பு செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார். அப்படியே குழந்தை வயிற்றில் வளர்ந்தால் பேறுகாலத்தில் தாய் அல்லது சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்கள்.

ஆண் குழந்தை பிறந்தது

தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்த மீரா எப்படியாவது எனது குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதனை அடுத்து தம்பதியினர் உடனே மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் சென்றனர்.

அங்கு கடந்த 5 மாதமாக மீராவுக்கு மருத்துவமணையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 29 கிலோ எடையுள்ள மீராவுக்கு சுவாச பிரச்சினையும் இருந்ததால் பேறுகாலத்தில் பல சிக்கல் உள்ளதாக கருதி டாக்டர்கள் நன்றாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் மீரா நல்ல முறையில் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவரை அனைத்து பெண்களும் நன்றாக கவனித்து கொண்டனர். ஆண் குழந்தைக்கு மருத்துவமனையிலேயே விராட் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் பிறந்த ஆண் குழந்தை மற்ற குழந்தையை போல சாதாரண உயரமும், 2 கிலோ 500 கிராம் எடையும் கொண்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்