கேபிள் டி.வி.அதிபர் கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

கேபிள் டி.வி.அதிபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-14 23:37 GMT

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி சத்யா(வயது30). ஆசிரியையான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி சத்யா வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக அதே ஊரை சேர்ந்த என்ஜினீயர் விஜய்(24) என்பவரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதை விஜய்யின் தந்தையான கேபிள் டி.வி.அதிபர் ராஜேந்திரன்(60) தட்டிக்கேட்டார். இதையடுத்து ராஜேந்திரனையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் தந்தை, மகன் இருவரையும் பொதுமக்கள் சத்யா வீட்டின் மற்றொரு அறையில் போட்டு பூட்டினர். அப்போது பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த ராஜேந்திரன் இறந்து போனார்.

இது குறித்து அறிந்த தலைவாசல் போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய விஜய்யை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு விஜய்யை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

இந்தநிலையில் கேபிள் டி.வி.அதிபர் ராஜேந்திரன் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தலைவாசல் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சந்திரன், நரசிம்மன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஆறகளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் துளசிதாஸ்(48) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஆறகளூரை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்