கால்நடை உதவி மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

ரத்து செய்த பதவி உயர்வை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-14 23:33 GMT

சேலம்,

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு துறையின்கீழ் செயல்படும் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர், கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் பதவி உயர்வுக்கான ஆணையை அரசு நிறுத்தி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவை கண்டித்து, தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் என 150 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். சேலம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் திரண்டு கோரிக்கை மனுக்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் இணை செயலாளர் டாக்டர் ரகுபதி, கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

இது குறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் செல்வகுமார் கூறுகையில், ‘‘அரசு அறிவித்த அரசாணை 49–ன்படி தமிழகம் முழுவதும் உதவி கால்நடை மருத்துவர்களுக்கு கலந்தாய்வின் மூலமாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 25 ஆண்டுக்கு பின்னர் பதவி உயர்வு ஆணை வெளியிடப்பட்டாலும் அனைவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தோம். இந்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியில் இணைந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பதவி உயர்வுக்கான ஊதியம் பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. அதற்குள் திடீரென்று பதவி உயர்வு ஆணை ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, ரத்து செய்த பதவி உயர்வுக்கான ஆணையை மீண்டும் அரசு அமல்படுத்திட வேண்டும்‘‘ என்றார்.

பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். போராட்டம் காரணமாக கால்நடை ஆஸ்பத்திரியில் நேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் கால்நடைகளை கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


மேலும் செய்திகள்