ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய கிரண்பெடி மன்னிப்பு கேட்க வேண்டும் சட்டசபையில், நாராயணசாமி ஆவேசம்

புதுவை சட்டசபையில் சென்டாக் மூலமாக மருத்துவ உயர் கல்வி பட்டம் மற்றும் பட்டய படிப்புக்கான சேர்க்கை தொடர்பான அறிக்கை ஒன்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

Update: 2017-06-14 23:45 GMT
புதுச்சேரி,

சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்ட சதி வேலை நடக்கிறது. கடந்த 24-1-2017 தேதியிட்ட தேசிய தேர்வு வாரியத்தின் குறிப்பின்படி மாநில ஒதுக்கீட்டிற்கான இறுதி தகுதிபட்டியல் மற்றும் வகுப்புவாரியான தகுதிபட்டியல் ஆகியவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நிறுவனங்கள், அவர்களின் தகுதி அடிப்படையில் சட்டதிட்டங்கள் மற்றும் இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தயார் செய்துகொள்ளலாம். முழு தரவரிசை பட்டியலையும் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை. 26-4-2017 அன்று மாணவர்களின் தகுதிபட்டியல் சென்டாக் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே கட்டணக்குழு தலைவரிடம் மருத்துவ உயர்கல்விக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும்படி வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கட்டண கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்ட இயலவில்லை.

50 சதவீத இடஒதுக்கீடு

தமிழ்நாடு உள்பட வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இருந்து கிளினிக்கல் மற்றும் கிளினிக்கல் அல்லாத மருத்துவ உயர்கல்விக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டினை புதுவை அரசு பெற்றது.
இந்தநிலையில் முதுகலை மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 613 மாணவர்களில் புதுவை மாநிலத்தின் ஒதுக்கீடான 162 இடங்களுக்கு 267 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் 2 கலந்தாய்வுகளில் கலந்துகொண்டனர்.

உயர்கல்விக்கான சேர்க்கை தரவரிசை மற்றும் சேர்க்கை ஒதுக்கீடு ரோஸ்டர் பட்டியல் ஆகியவை சென்டாக் வலைதளத்தில் மே 1-ந்தேதி, அதாவது சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. எந்த ஒரு பின்தங்கிய மாணவருக்கும் ஒதுக்கீடு மறுக்கப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மே மாதம் 4 மற்றும் 11-ந்தேதிகளிலும் 18, 19-ந் தேதிகளிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த 2 கட்ட கலந்தாய்வுகளில் 91 இடங்கள் புதுவை அரசின் இடஒதுக்கீட்டிலும், 118 இடங்கள் நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டிலும் மாணவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. பட்டய படிப்பில் புதுவை அரசுக்கான 13 இடங்கள் நிரப்பப்பட்டன. 2 கலந்தாய்வுகளுக்கான முடிவில் புதுவை அரசு இடங்களில் 71 இடங்கள் காலியாக இருந்தன.

இந்தநிலையில் மத்திய அரசு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைத்து அறிவித்தது. அதன்படி தரவரிசை அடிப்படையில் நடந்த கலந்தாய்வில் புதுவையை சேர்ந்த மேலும் 10 பேர் சேர்ந்தனர். மொத்தத்தில் புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் 101 இடங்கள் நிரம்பின. இதன்மூலம் பட்டய படிப்பு சேர்க்கை ஆணை வழங்கப்பட்ட மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 114 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

தனியார் கல்லூரிகளுக்கு நோட்டீசு

இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரூ.3½ லட்சமாக கல்வி கட்டண நிர்ணயக்குழு அறிவித்தார். இதை தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஏற்க மறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த கட்டணம் ரூ. 5½ லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையும் ஏற்க மறுத்து 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து மாணவர் சேர்க்கைக்கு தடை உத்தரவு பெற்றன.
அரசு ஒதுக்கீட்டிலும், நிர்வாக ஒதுக்கீட்டிலும் சென்டாக் மூலம் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கு அனுமதி மறுத்த கல்லூரிகள் எச்சரிக்கப்பட்டன. தடையில்லா சான்று அளிக்கப்பட்டதை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அதன் நகல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டது.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

கடந்த 30-ந்தேதி சென்டாக் அலுவலகத்துக்கு சென்ற கவர்னர் எங்களுடைய அரசின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எங்கள் அரசு 71 இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டதாக பொய்யான தகவலை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள். நான் தலையிட்டு அதை சரிசெய்தேன் என்று கூறியுள்ளார். அவரால் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுகிறேன்.

புதுச்சேரி மக்களையும், மாணவ, மாணவிகளையும் திசைதிருப்ப கலப்படமற்ற பொய்யை கூறிய கவர்னர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இதுபோன்று மக்களையும், மாணவர்களையும் உண்மைக்கு புறம்பாக திசை திருப்பும் கவர்னரின் செயல்பாடுகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வைக்கிறேன்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பானது

இறுதிகட்ட கலந்தாய்வில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு 20 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அதற்கான கட்டணவிகிதம் சுமார் ரூ.50 லட்சம் என்பதால் அந்த சேர்க்கை ஆணையை மாணவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் கடந்த 31-ந்தேதி கவர்னர் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான கட்டண விகிதம் ரூ.5½ லட்சம் மட்டுமே என்று அறிவித்தார்.

இதன் முடிவில் அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாமல் தெருவில் நிற்கின்றனர். தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தைப்போல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதே எங்களுடைய அரசின் கொள்கை.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி சென்டாக் கலந்தாய்வு 2 முறை மட்டுமே நடத்தப்பட வேண்டும். இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி 3-வது கலந்தாய்வு நடத்த கவர்னர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்த செயல் மருத்துவ கவுன்சில் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளுக்கு புறம்பானது. இந்த அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கியது?
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்