உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரியில் நடந்த உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2017-06-14 22:45 GMT
தர்மபுரி,

உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி தர்மபுரியில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆவின் பாலகம் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் 4 ரோடு, பைபாஸ் ரோடு வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாணவ-மாணவிகள் வழங்கினார்கள். இதில் ரத்தகொடையாளர்கள், ஆய்வக நுட்பனர்களும் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாம்

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தொடங்கி வைத்து ரத்ததானம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த முகாமில் 30 மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜூ, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பொன்னுராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட திட்ட மேலாளர் உலகநாதன், தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் டாக்டர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்