ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 202 பேர் கைது

சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 202 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-14 23:00 GMT
அரியலூர்,

சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. அரியலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் இளைஞர் அணி துணை பொதுச் செயலாளர் சுபா, மாவட்ட இளைஞர்அணி தலைவர் இளையராசன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பியபடியே மறியலில் ஈடு பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தி.மு.க.வினர் 70 பேரை கைது செய்தனர்.

திருமானூர், ஜெயங்கொண்டம்...

இதேபோல் சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தா.பழூர் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் தா.பழூர் அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 31 பேர் கைது செய்யபட்டனர்.

ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் நான்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமானூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால் உள்ளிட்ட 25 பேரும், கீழப் பழுவூரில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோகசக்கரவர்த்தி உள்ளிட்ட 15 பேர் உள்பட மொத்தம் 202 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்