பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது ரூ.40 ஆயிரம் பணம் பறிமுதல்

திருச்சியில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-06-14 22:15 GMT

மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி பழைய கரூர் ரோடு காவிரி பார்க்கை சேர்ந்தவர் பாண்டியன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது24). கடந்த 6–ந்தேதி இரவு பாண்டியன் வேலை வி‌ஷயமாக வெளியூர் சென்று விட்டார். இதனால் ஜாஸ்மின் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் முகத்தை துணியால் மறைத்து கட்டிய 2 பேர் புகுந்தனர். அவர்கள் ஜாஸ்மினின் கை கால்களை கட்டி போட்டனர். குழந்தைகளை கொன்று விடுவதாக கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்தபுகாரின்பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அருண் உத்தரவுபடி கோட்டை போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தினார்கள். இதில் மேல சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த கார்த்திக் (25) அவரது நண்பர் ஆகாஷ் என்கிற லெனின்(20) ஆகிய இருவரும் சேர்ந்து தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

2 வாலிபர்கள் கைது

கொத்தனாரான கார்த்திக் ஏற்கனவே ஜாஸ்மின் வீட்டின் அருகே கட்டிட வேலை செய்த போது அவரது வீட்டை நோட்டம் விட்டு உள்ளார். ஜாஸ்மினின் கணவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு லெனின் உதவியுடன் சம்பவத்தன்று கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோட்டை போலீசார் நேற்று கார்த்திக்கையும், லெனினையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜாஸ்மின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்