அடுத்த மாதம் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு பணி
அடுத்த மாதம் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு பணி கலெக்டர் ராஜேஷ் தகவல்
கடலூர்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு பணி அடுத்த மாதம்(ஜூலை) நடைபெற இருப்பதாக கடலூரில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்கடலூர் மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:–
சிறப்பு பணிஇந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோர் அறிவுரைகளின்படி 1–1–2017–ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 5–ந் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இச்சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்ட 18 முதல் 21 வயதுடைய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு பணி அடுத்த மாதம்(ஜூலை) 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் கொடுக்கலாம்.
சிறப்பு முகாம்மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக அடுத்த மாதம்(ஜூலை) 9 மற்றும் 23–7–2017(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாம் நடைபெறும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை பொதுமக்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நிக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
18 வயது நிறைவடைந்த அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் தபால் மூலமாகவும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும், இ–சேவை மையங்களின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகவர்கள் குறித்த விவரம்முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்த கலெக்டர் ராஜேஷ், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பாகவும், வாக்குச்சாவடிகளில் முகவர்கள் குறித்த விவரங்களையும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தெரிவித்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சண்முகம், தாசில்தார்(தேர்தல்) செந்தில்குமார் மற்றும் அனைத்து கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், துணை தாசில்தார்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.