மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல் 417 பேர் கைது
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 13 இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 417 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நாமக்கல்,
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் நகர பொறுப்பாளர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ராணி, மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், மகளிர் அணி அமைப்பாளர் ராணி மற்றும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம்தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த சாலை மறியலுக்கு ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், நகர அவைத் தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ராசிபுரம் பழைய கோர்ட்டு அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் அழகரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் அருள், நந்தகுமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஸ்பாபு, இளைஞர் அணி கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 இடங்களிலும் மறியல் செய்ததாக தி.மு.க.வினர் 33 பேரை ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.
திருச்செங்கோடு–பள்ளிபாளையம்திருச்செங்கோடு நகர தி.மு.க. சார்பில் நேற்று மதியம் திருச்செங்கோடு புது பஸ் நிலையம் ரவுண்டானா முன்பு சங்ககிரி மெயின் ரோட்டில் நகர செயலாளர் ஆர்.நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேரன் சக்திவேல், ராஜவேல் உள்பட நகர நிர்வாகிகளும், வார்டு கிளைக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பள்ளிபாளையம் நகர தி.மு.க. சார்பில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் குமார், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் யுவராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வினோத், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மற்றும் கட்சியினர் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புதன்சந்தை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
குமாரபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
417 பேர் கைதுபரமத்தி வேலூரில் அண்ணா சிலை அருகே நகர செயலாளர் மணிமாரப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 24 பேரும், பொத்தனூரில் நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேரும், வேலகவுண்டம்பட்டியில் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் ஈடுபட்ட 32 பேரும், பரமத்தியில் நகர செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரும், பாலப்பட்டியில் மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் ஈடுபட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டனர். கபிலர்மலையில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 80 பேர் கலந்து கொண்டனர். வெண்ணந்தூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் 417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.