புதுவையில் மேலும் 20 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை

புதுவையில் மேலும் 20 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் தகவல்

Update: 2017-06-13 23:15 GMT

புதுச்சேரி,

புதுவையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ரவுடி கைது செய்யப்பட்டார். மேலும் 20 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை சார்பில் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் கூறினார்.

குண்டர் தடுப்பு சட்டம்

புதுவையில் கொலை, கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்ததால் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமரகுரு பள்ளத்தை சேர்ந்த சங்கர் என்கிற மொந்த சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது காலாப்பட்டு சிறையில் உள்ள அவரிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டுள்ளது.

ரவுடி கைது

இந்தநிலையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி சிவா என்கிற டிராக் சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய புதுவை மாவட்ட கலெக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் நேற்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அதற்கான உத்தரவு நகலை ஏற்கனவே காலாப்பட்டு சிறையில் உள்ள டிராக் சிவாவிடம் வழங்கினர்.

இவர் மீது தமிழகம் மற்றும் புதுவையில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வெடிகுண்டு உள்பட 19 வழக்குகள் உள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கையால் ரவுடிகள் பீதி அடைந்துள்ளனர். பலர் புதுவை மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

20 ரவுடிகள் பட்டியல் தயார்

இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:–

புதுவை அரசு உத்தரவின் பேரில் ரவுடிகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் புதுவையில் ரவுடிகளுக்கு இடம் இல்லை. முதல் கட்டமாக குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 ரவுடிகளை கைது செய்ய காவல்துறை சார்பில் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் இதுவரை 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டரின் அனுமதி கிடைத்ததும் இன்னும் 5 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள். புதுவையில் மேலும் 20 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டியல் தயார். காவல்துறை சார்பில் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.

புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பிச்சைக்காரர்கள் வருகின்றனர். அவர்களை கண்காணித்து திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் பிச்சைக்காரர்களை கண்காணித்து திருப்பி அனுப்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்